13/01/2024
"இன்னொரு மலை இன்னொரு நதி"
எனது புதிய நூல்
"பயணங்கள் உங்களை பேச்சு இல்லாமல் வாயடைக்க வைக்கும். பின் அவை உங்களை கதை சொல்லி ஆக்கும்" என பயணங்கள் குறித்து ஐயன் பட்டூடா சொல்லிய கூற்று ஒன்று உண்டு. ஆம்! நம்மை தொலைக்கும் தருணங்கள் பயணங்களில் மட்டுமே நிகழும். அதற்கு கிராண்ட் கானியனின் விளிம்பில் பயணிக்க வேண்டும் என்றில்லை. கும்பகோணம் அரசலாற்றின் ஓரம் நின்று காவிரியை பார்த்துக் கொண்டே நிற்கையிலும் தொலைந்து போக முடியும். 5A அந்தோணி பஸ் சர்வீஸில் ஏறி டவுன் வாகையடி முக்கில் இறங்கி இலட்சுமி தியேட்டர் போகும் பயணத்திலும் , ஆத்தங்கரை பள்ளிவாசல் பஸ்ஸில் ஒடிசலான மூலைக்கரைப்பட்டி சாலையை கடக்கும் பயணத்திலும் என் சிறுவயது சிலாகிப்புகள் மவுனங்கள் நிறையவே உண்டு. அந்தப் பேருந்துகளின் ஜன்னலோரங்கள் எனக்கான அப்போதைய அரசமரத்தடிகள்.
"ஏம்ப்பா இப்படி கிங் சைஸ் படுக்கையிலும் ஒருபக்கமாய் ஓரமாய் விளிம்பில் படுக்கிறீங்க?" என என் பெண் வசைபாடியபோது, "இரயில் பர்த்தில்/ விமான இருக்கையில், ஒடுக்கிப்படுத்து 'அக்கடா' என கை காலை விரித்துப் படுத்தல் மறந்தே போயிற்று" என விளங்கிற்று. ஆனால் இந்த இருபது வருட பயணத்தின் போதான உறக்கத்தின் கனவுகள் விரிந்தவை வேறுவிதம். தேம்ஸ் நதியோர க்யூ கார்டனிலும், நீலகிரி மலைக்காடுகளிலும் மரங்களுடன் பேசியவை என் மூளையின் மொழி மையம் மட்டுமே அறிந்த கவிகளாயிற்று. மறுபடி மறுபடி பயணிக்க, என்னை உந்தும் டோப்பமின்கள் அந்த மையத்தில் புதைந்திருக்கும் கவிதை வரிகளின் உசுப்பலாலேயே நிகழ்கின்றது.
இந்த தொகுப்பும் ஒவ்வொரு சிறு பெரும் பயணத்தினை மனசு அசை போட்ட தருணங்களில் கொஞ்சம் வசீகரித்து எழுதியவையே. மறுபடி எடுத்து வாசிக்கையில் முகத்தில் புன்னகை ஒட்டிக்கொள்கிறது. மனசுக்குள் பரவசம் பீச்சுகின்றது. கத்தரிப்பூ பாவாடை அணிந்த குட்டிக்குழந்தை ஒன்று நம் விரல் பற்றி "வாங்க மாமா" என இழுத்துச் செல்லும் சிலாகிப்பு அனுபவம் கிட்டுகின்றது. முக நூலில் இதனை அவ்வப்போது பகிர்ந்த போது வாசகர்கள் "நாங்களும் உங்களோடு பயணித்த உற்சாகம் " என எழுதியதில் இந்த உளப்பிரவாகை வாசிக்கும் நம் நட்பு உள்ளங்களுக்கும் நிச்சயம் கிட்டும் என தோன்றிற்று.
ஒரு வேளை இந்த வாசிப்பு, உங்களை அந்தமானுக்கோ ஃபீனிக்ஸிற்கோ ஒருசமயம் அழைத்துச் செல்லுமானால், அது இந்த நூலுக்கு கிடைத்த வெற்றி. ஒரு வேளை இந்த வாசிப்பு இன்னும் உங்களை இன்னொரு தளத்திற்கு உயர்த்திட, உங்களின் மடித்துவைக்கப்பட்டிருக்கும் சிறகுகளைச் சிலுப்பி விரிக்குமானால், அது பேரானந்தம்.
முக நூலில் மட்டும் நான் எழுதிப் பகிர்ந்திருந்த இக்கட்டுரைகளைச் செம்மைப்படுத்தி தொகுத்து நூலாக்கிட உதவிய நண்பர் அறிவழகன் அவர்க்கும், அச்சிட்டு நூலாக்கி புது வடிவம் கொடுத்திட்ட டிஸ்கவரி நூலக வெடியப்பன் அவர்கட்கும், மனமார்ந்த நன்றிகள்.
"பயணிக்க வேண்டும் , பயணங்களை வாசிக்கவேண்டும், ஒவ்வொரு பயணத்திலும் சந்திக்கும் வேற்று நிலத்தின் மனிதனுள் ஒளிந்திருக்கும் சகமனிதனின் வாழ்வியலை, அவன் சமூகத்து அறத்தை, அச்சமூகம் உலகில் கட்டி எழுப்பிய நாகரீகத்தை கற்றுக்கொள்ள வேண்டும்" என தன் வசீகர எழுத்துக்களால் கற்றுத்தந்த, பெருமதிப்பிற்குரிய எழுத்தாளர் எஸ் ரா அவர்கள் இந்நூலுக்கு அணிந்துரை வழங்கியிருப்பது எனக்கு பெரும் பேறு. மதிப்புமிகு எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் ஐயாவிற்கு மனார்ந்த நன்றிகளும் வணக்கங்களும்!
இன்னொரு மலை இன்னொரு நதி- இப்போது சென்னைப் புத்தகக் கண்காட்சியில்...
கிடைக்குமிடங்கள்
F 55 - டிஸ்கவரி புக் பேலஸ்
66,67 - டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ்
395,396- பூவுலகின் நண்பர்கள்