ArivuThottam

ArivuThottam This is the official page of ArivuThottam - Practical and Healthy Organic Farming..

26/07/2026

மக்கள் நலச் சந்தை, காந்தி நகர், வேலூர்.
அன்புடையீர் ,
வணக்கம்.
மக்கள் நலச் சந்தை கடந்த நான்காண்டாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இது ஒரு தனித்துவமானச் சந்தை:
 இயற்கை விவசாய உற்பத்தியில் காய்கறிகள் பழங்கள் கீரைகள் விற்பனை
 பாரம்பரிய அரிசி வகைகள் , மரச் செக்கு எண்ணெய் வகைகள், தேன் மற்றும் மதிப்புக்கூட்டப்பட்ட உணவு வகைகள்
 விவசாயிகள், உற்பத்தியாளர்கள் நேரிடையாக நுகர்வோர்களுக்கு விற்பனை
 அனைத்துப் பொருட்களும் ஒரே இடத்தில் நியாய விலையில் விற்பனை
 ஒவ்வொரு மாதமும் இரண்டாம் சனிக்கிழமை மாதாந்திர சந்தை நடைபெறும் . இதுவரை 50 மாதாந்திரச் சந்தை நடைபெற்றுள்ளது.
மாதச் சந்தை நடைபெறும் இடம்: திருமகள் திருமண மண்டபம், காந்தி நகர், வேலூர் 632006
 ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை வாரச்சந்தையும் நடைபெறுகிறது.
காலை 6.00 முதல் 10.00 மணி வரை நடைபெறுகிறது. நடைபெறும் இடம் : அசோக் பிளாண்ட் நர்சரி, காந்தி நகர், வேலூர்.


ஐந்தாம் ஆண்டு துவக்க சிறப்பாக நடைபெற்றது.


மக்கள் நலச் சந்தை தொடர்பான அனைத்து தகவல்களும் தெரிவிக்க மூன்று வாட்ஸ் ஆப் குழுக்கள் இயங்கி வருகின்றன.
இதில் 3000 உறுப்பினர்கள் தகவல் பெற்று வருகின்றனர்.

இயற்கை விவசாயப் பொருட்களின் சிறப்பு ,பாரம்பரிய அரிசிகளின் பயன்கள், பழங்களின் மகத்துவம் போன்ற பல பயனுள்ள தகவால்கள் மக்கள் அறிந்து கொள்ள பகிரப்படுகிறது. பலர் இந்த பகிர்வுகளைப் பாராட்டி வருகின்றனர்.

புதிதாக இணைய விருப்புபவர்கள்
“Makkal Nala santhai News 3“ என்ற குழுவில் கீழ்கண்ட இணைப்பின் வழி குழுவில் இணைய வேண்டுகிறோம்.

https://chat.whatsapp.com/Bm67NfJ13aAFoRJCVQDeMa?s=cl&p=a&ilr=4&amv=1

தங்களது நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.
தங்களது ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களை கீழ்கண்ட எனது எண்ணிற்கு தெரியப்படுத்தலாம்.
மூன்று குழுவிலும் ஒரே தகவல்தான் பகிரப்படும். ஏற்கனவே உள்ள இரண்டு குழுவில் இருப்பவர்கள் இந்தக் குழுவில் இணைவதைத் தவிர்க்க வேண்டுகிறோம்.
இது உள்ளூர் சந்தைக்கானது. எனவே, வெளி நாட்டு எண்களை அனுமதிக்க இயலாது.
தங்கள் மூலமே உங்கள் நண்பர்கள் உறவினர்களுக்குத் தகவல் சேரும். தவறாமல் அவர்கள் இணைவதை உறுதிப்படுத்துங்கள்.
இது
விற்கும் இடமல்ல கற்கும் களம்.
இது
வியாபாரத்திற்கானது அல்ல
விசை கொள்ள வேண்டிய இயக்கத்தின் ஒரு புள்ளி
இயற்கை விவசாயம் ஆதரிப்போம்
ஆரோக்கியமன உணவு உண்பதை
அடுத்த தலைமுறையினருக்கு கடத்துவோம்
இயற்கை நேசிப்பில்,
கு.செந்தமிழ் செல்வன்,
ஒருங்கிணைப்பாளர், மக்கள் நலச் சந்தை 9443032436

08/07/2026

யூனியன் வங்கி ஓய்வூதியர் மற்றும் ஓய்வு பெற்றோர் சங்கத்தின் தமிழ்நாடு நான்காவது முப்பெரும் மாநாட்டில், ஓய்வுக்குப் பிறகும் சமூகப் பணியிலும் படைப்பூக்கமான செயல்பாடுகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருபவர்களை கௌரவித்தனர். அந்தப் பெருமை எனக்கும் கிடைத்தது. மாநாட்டில் என் இரண்டாம் சுற்று வாழ்க்கைப் பயணத்தைப் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பும் அமைந்தது. அந்த அனுபவங்களின் தொகுப்பே இந்தக்கட்டுரை.

பகுதி – 1.

இரண்டாம் சுற்று – ஓய்வை சமூகத்துடன் இணைந்த இனிய பயணம்
"வாழ்க்கையில் ஓய்வு என்பது பணியிலிருந்து மட்டுமே; வாழ்க்கையிலிருந்து அல்ல." இந்த உண்மையை நான் உணர்ந்தது, வங்கிப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகுதான்.
சிலருக்கு ஓய்வு என்பது அமைதியாக வீட்டில் அமர்ந்து காலத்தைக் கழிக்கும் பருவமாக இருக்கலாம். இன்னும் சிலருக்கு அது குடும்பத்துடன் செலவிடும் பொற்காலமாக அமையலாம். ஆனால் எனக்கு, ஓய்வு என்பது சமூகத்துடன் மீண்டும் இணைவதற்கான ஒரு புதிய வாய்ப்பாக அமைந்தது. பணிக் காலத்தில் பெற்ற அனுபவங்களையும், சமூக இயக்கங்களில் கற்ற பாடங்களையும், இயற்கையிடமிருந்து பெற்ற உணர்வுகளையும் ஒன்றிணைத்து, மக்களுக்குப் பயன்படும் ஒரு புதிய வாழ்க்கையை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் என்னுள் வேரூன்றியது.
அந்த எண்ணத்தின் பயனாகவே என் வாழ்க்கையின் "இரண்டாம் சுற்று" தொடங்கியது.

சமீபத்தில் யூனியன் வங்கி ஓய்வூதியர் மற்றும் ஓய்வு பெற்றோர் சங்கத்தின் தமிழ்நாடு மாநில மாநாட்டில், ஓய்வுக்குப் பிறகும் சமூகப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருபவர்களைக் கௌரவித்தனர். அந்த மேடையில் என்னையும் கௌரவித்தனர். மேலும், என் இரண்டாம் சுற்று வாழ்க்கையின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது.
அந்த மேடையில் நின்றபோது, ஒரு விஷயம் என் மனதில் தோன்றியது. இந்தப் பாராட்டு ஒருவருக்கானதல்ல; ஒரு சிந்தனைக்கான அங்கீகாரம். ஓய்வு என்பது முடிவு அல்ல, அது புதிய தொடக்கம் என்பதற்கான அங்கீகாரம்.
எதிர்திசைப் பயணம்
வங்கிப் பணியிலிருந்து ஓய்வு பெற்றபோது, பலர் எதிர்பார்த்த வாழ்க்கையை நான் தேர்ந்தெடுக்கவில்லை.
வேலூர் நகரின் மையப்பகுதியில் இருந்த குடியிருப்பு வீட்டை விற்று, ஒரு விவசாய நிலத்தை வாங்கினேன்.
"ஓய்வுக்குப் பிறகு இவ்வளவு செய்ய இயலுமா?" என்று பலரும் கேட்டார்கள்.
என் பதில் ஒன்றுதான்.
"வாழ்க்கையின் முதல் சுற்று எனக்காக இருந்தது; இரண்டாம் சுற்று மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் இருக்க வேண்டும்."

நான் வாங்கிய நிலம் பசுமை நிறைந்த தோட்டமாக இல்லை. பல ஆண்டுகளாக வறண்டிருந்த நிலம். அந்த நிலத்தைப் பார்த்தவர்கள், "இங்கே என்ன விளையும்?" என்று கேட்டார்கள்.
ஆனால், இயற்கையின் மீது இருந்த நம்பிக்கை வேறு ஒன்றைச் சொன்னது.
இயற்கை ஒருபோதும் ஏமாற்றாது. அதற்குத் தேவையான அன்பையும் பொறுமையையும் கொடுத்தால், அது பல மடங்கு திருப்பிக் கொடுக்கும்.
அந்த நம்பிக்கையோடு தொடங்கிய முயற்சி, இன்று பசுமை நிறைந்த உயிர்ச்சூழலாக வளர்ந்துள்ளது.
அறிவுத்தோட்டம் – ஒரு கனவின் உருவாக்கம்
என் பண்ணைக்கு "அறிவுத்தோட்டம்" என்று பெயர் வைத்தது தற்செயலானதல்ல.
விவசாயம் என்பது வெறும் உழைப்பு மட்டுமல்ல; அது அறிவியலும், அனுபவமும், இயற்கையுடனான உரையாடலும் ஆகும்.
இந்த மூன்றும் இணையும் இடமாக அறிவுத்தோட்டத்தை உருவாக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.
இயற்கை வேளாண்மை, ஒருங்கிணைந்த பண்ணை, பலப்பயிர் சாகுபடி, மூலிகைப் பண்ணை, மலர்த் தோட்டம், நாட்டுக்கோழி வளர்ப்பு, தேனீ வளர்ப்பு, மரவளர்ப்பு—இவை அனைத்தையும் ஒரே இடத்தில் ஒருங்கிணைத்தோம்.
அதோடு, விவசாயம் என்பது வருமானம் தரும் தொழிலாக மட்டுமல்ல, வாழ்க்கையைப் புரிந்துகொள்ளும் ஒரு பள்ளியாகவும் மாற வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டோம்.
இன்று அறிவுத்தோட்டம், பசுமையை ரசிக்க வரும் இடமாக மட்டுமல்ல; சிந்தனைகளை விதைக்கும் இடமாகவும் வளர்ந்துள்ளது.
வேளாண் சுற்றுலா – விவசாயத்தின் புதிய பரிமாணம்
விவசாயியின் வருமானத்தை உயர்த்த புதிய வழிகள் தேவை.
அந்த வகையில், வேளாண் சுற்றுலா விவசாயிகளுக்கு கிடைத்துள்ள மற்றொரு அட்சயப் பாத்திரம்.
மாணவர்கள், இளைஞர்கள், ஆசிரியர்கள், குடும்பங்கள், விவசாயிகள் என பல தரப்பினரும் அறிவுத்தோட்டத்திற்கு வருகிறார்கள்.
அவர்கள் மரங்களைப் பார்ப்பதற்காக மட்டும் வருவதில்லை.
ஒரு விதை எப்படி மரமாகிறது?
மண் ஏன் உயிருடன் இருக்க வேண்டும்?
தேனீ ஏன் விவசாயியின் நண்பன்?
பல்லுயிர் பெருக்கம் ஏன் அவசியம்?
இயற்கை வேளாண்மை ஏன் எதிர்காலத்தின் தேவை?
என்பதை அனுபவத்தின் வழியாகக் கற்றுக்கொண்டு செல்கிறார்கள்.

ஒரு நாள் முழுவதும் இயற்கையோடு இணைந்து வாழும் அந்த அனுபவம், பலரது வாழ்க்கைப் பார்வையையே மாற்றியிருக்கிறது.

அதுவே அறிவுத்தோட்டத்தின் மிகப்பெரிய வெற்றி என்று நான் கருதுகிறேன்.

இரண்டாம் சுற்று – ஓய்வை சமூக மாற்றமாக மாற்றிய என் பயணம்

பகுதி – 2 : அறிவுத்தோட்டம் – ஒரு பண்ணையைத் தாண்டிய சமூகப் பல்கலைக்கழகம்

அறிவுத்தோட்டத்தை உருவாக்கியபோது, என் நோக்கம் ஒரு நல்ல பண்ணையை உருவாக்குவது மட்டுமல்ல. அறிவு பரிமாறப்படும் ஒரு திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தை உருவாக்க வேண்டும் என்பதுதான்.
இன்று கல்வி என்பது வகுப்பறைகளுக்குள் மட்டுமே இருப்பதில்லை. வாழ்க்கையிலிருந்தும், இயற்கையிலிருந்தும், மனிதர்களின் அனுபவங்களிலிருந்தும் கற்றுக்கொள்வதே நிலையான கல்வி. அந்தக் கல்வியை குறிப்பாக, விவசாயம் குறித்தக் கல்வியை, எளிமையாக மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணமே அறிவுத்தோட்டத்தின் ஒவ்வொரு செயல்பாட்டிற்கும் அடிப்படையாக அமைந்தது.

கடந்த பல ஆண்டுகளில் பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், வேளாண் பல்கலைக்கழக மாணவர்கள், ஆய்வாளர்கள், விவசாயிகள், தொழில்முனைவோர், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் அறிவுத்தோட்டத்திற்கு வருகை தந்துள்ளனர்.
அவர்கள் ஒரு பண்ணையைப் பார்த்துவிட்டு மட்டும் திரும்புவதில்லை. இயற்கை, மண், மரம், நீர், பறவைகள், பூச்சிகள், மனிதன் ஆகிய அனைத்திற்கும் இடையிலான உயிரியல் உறவைப் புரிந்துகொண்டு திரும்புகிறார்கள்.
இயற்கை வேளாண்மை என்பது வெறும் ரசாயன உரங்களைத் தவிர்ப்பது மட்டுமல்ல. இயற்கையை நேசிக்கும் ஒரு வாழ்க்கைத் தத்துவம் என்பதை எடுத்துரைப்பதற்கே நான் அதிக முக்கியத்துவம் அளிக்கிறேன். விவசாயம் குறித்த அடிப்படை அறிவியல் புரிதலுடன், இயற்கையை நேசிக்கும் மனப்பான்மையும் பார்வையாளர்களிடம் வளர வேண்டும் என்பதே அறிவுத்தோட்டத்தின் நோக்கமாகும்.
வேளாண் சுற்றுலா – விவசாயிக்கு புதிய வருமானப் பாதை
இன்றைய விவசாயி எதிர்கொள்ளும் மிகப் பெரிய சவால், உற்பத்தி மட்டும் அல்ல; வருமானத்தின் நிலைத்தன்மை. இதற்கு மாற்று வழிகளைத் தேடியபோது வேளாண் சுற்றுலா நம்பிக்கை அளித்தது.
இயற்கையின் மடியில் ஒரு நாள் கழிப்பது, விவசாயத்தை அனுபவிப்பது, மண்ணின் மணத்தை உணர்வது, மரங்களோடு உரையாடுவது, பறவைகளின் குரலைக் கேட்பது—இவை அனைத்தும் நகர வாழ்க்கையில் அரிதாகிவிட்டன. இதை மீண்டும் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தோடு அறிவுத்தோட்டத்தில் வேளாண் சுற்றுலாவை வடிவமைத்தோம்.
இன்று குடும்பங்கள், கல்வி நிறுவனங்கள், விவசாயக் குழுக்கள், சமூக அமைப்புகள் என பலரும் அறிவுத்தோட்டத்திற்கு வருகை தருகின்றனர். இயற்கையோடு இணைந்து ஒரு நாள் செலவிடும் அனுபவம், அவர்களின் வாழ்க்கை நோக்கையே மாற்றுகிறது. இதன் மூலம் விவசாயிக்கும் கூடுதல் வருமானம் கிடைக்கிறது; மக்களுக்கும் இயற்கையை அறியும் வாய்ப்பு கிடைக்கிறது.
உரையாடல்களே மாற்றத்தின் விதைகள்
அறிவு என்பது புத்தகங்களில் மட்டும் இருப்பதில்லை. மனிதர்களின் அனுபவங்களிலும் உள்ளது. அதனால்தான் அறிவுத்தோட்டத்தில் மாதந்தோறும் விவசாயிகளின் கலந்துரையாடலை நடத்தி வருகிறோம்.
இந்தக் கூட்டங்களில் ஒருவர் பேச, மற்றவர்கள் கேட்பதில்லை. அனைவரும் தங்களுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள். ஒரு விவசாயியின் வெற்றி, மற்றொரு விவசாயிக்குப் புதிய நம்பிக்கையாக மாறுகிறது.
ஒரு தோல்வி, பலருக்கு பாடமாக மாறுகிறது. இப்படிப்பட்ட உரையாடல்கள்தான் இயற்கை வேளாண்மையை விரிவுபடுத்துவதில் மிகப்பெரிய பங்கு வகிக்கின்றன.
அறிவை மக்களிடம் கொண்டு செல்லும் அமைப்புகள்
ஒரு மனிதன் தனியாகச் செயல்படுவதற்கு ஒரு எல்லை உண்டு. ஆனால் ஒரு அமைப்பு உருவானால், அது தலைமுறைகளைத் தாண்டியும் பயணிக்கும்.
அந்த எண்ணத்தில்தான் பல அமைப்புகளை உருவாக்கினோம்.
மக்கள் நலச் சந்தை
மக்கள் நலச் சந்தை அவற்றில் முதன்மையானது. உற்பத்தியாளருக்கும் நுகர்வோருக்கும் இடையில் நேரடி உறவை உருவாக்கும் இந்தச் சந்தை, விவசாயிக்கு நியாயமான விலையையும், நுகர்வோருக்கு நச்சில்லாத உணவையும் வழங்கும் மக்கள் இயக்கமாக வளர்ந்துள்ளது. இன்று பல இடங்களில் இதன் முன்மாதிரியில் உள்ளூர் சந்தைகள் உருவாகி வருவது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.
மண்நல மையம்
விவசாயிகளுக்கு அறிவியல் அடிப்படையிலான ஆலோசனைகளை வழங்கும் நோக்கில் மண்நல மையம் உருவாக்கப்பட்டது. மண்ணைப் பாதுகாப்பதே விவசாயத்தின் அடித்தளம் என்ற விழிப்புணர்வை இது தொடர்ந்து உருவாக்கி வருகிறது. பல கிராமங்களில் விவசாயிகளின் வழிகாட்டியாக விளங்குகிறது

பெண்கள் விவசாயத் தொழில்முனைவோர் கூட்டமைப்பு( WAN – Women Agripreneurs Network )
பெண்களின் பங்களிப்பு இல்லாமல் வேளாண்மையின் எதிர்காலம் முழுமையடையாது என்ற நம்பிக்கையோடு பெண்கள் விவசாயத் தொழில்முனைவோர் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. பெண்கள் விவசாயத் தொழில்முனைவோராக உருவாகவும், மதிப்புக்கூட்டிய பொருட்கள் தயாரிக்கவும், தன்னம்பிக்கையுடன் சந்தையை எதிர்கொள்ளவும் இந்த அமைப்பு வழிகாட்டுகிறது.

STAR – Students Agripreneur
இன்றைய மாணவர்களே நாளைய விவசாயத் தலைவர்கள். இதை மனதில் கொண்டு STAR – Students Agripreneur என்ற அமைப்பை உருவாக்கினோம். விவசாயம், தொழில்முனைவு, சந்தைப்படுத்தல், புதுமைச் சிந்தனை ஆற்றல் படுத்துவது ஆகியவற்றை மாணவர்களிடம் விதைப்பதே இதன் நோக்கம்.
தகவல் தொடர்பு – அறிவைப் பகிரும் பாலம்
இன்றைய உலகில் தகவல் தொடர்பு இல்லாமல் எந்த இயக்கமும் வளராது. அதனால் ஆயிரக்கணக்கான விவசாயிகளுடன் நேரடித் தொடர்பை உருவாக்கியுள்ளோம்.
வாட்ஸ்அப் குழுக்கள், டெலிகிராம், முகநூல், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்கள் வழியாக இயற்கை வேளாண்மை, மக்கள் நலச் சந்தை, அறிவுத்தோட்ட நிகழ்வுகள், புதிய தொழில்நுட்பங்கள், அரசுத் திட்டங்கள் ஆகிய தகவல்கள் தொடர்ந்து பகிரப்படுகின்றன.
'சுழலும் சூழல் நூலகம்'
அதேபோல், 'சுழலும் சூழல் நூலகம்' என்ற முயற்சியின் மூலம் புத்தகங்களையும் அறிவையும் நேரடியாக விவசாயிகளிடம் கொண்டு செல்கிறோம்.
அறிவைப் பகிர்வதே சமூக முன்னேற்றத்தின் முதல் படி என்ற நம்பிக்கையோடு இந்த முயற்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அறிவுத்தோட்டம் இன்று ஒரு பண்ணை அல்ல.
அது இயற்கையை அறிமுகப்படுத்தும் பள்ளி;
விவசாயியை வலுப்படுத்தும் பயிற்சி மையம்;
இளைஞர்களுக்கு தொழில்முனைவு விதைக்கும் களம்;
சமூக மாற்றத்திற்கான திறந்தவெளிப் பல்கலைக்கழகம்
பகுதி – 3 : அங்கீகாரங்களும் வாழ்க்கையின் அர்த்தமும்

விருதுகள் – இலக்கல்ல; பொறுப்பின் அடையாளம்
நான் செய்த பணிகளுக்கு பல்வேறு அமைப்புகள் வழங்கிய விருதுகளும் பாராட்டுகளும் எனக்கு மகிழ்ச்சியை அளிக்கின்றன. ஆனால் அவற்றை நான் சாதனைகளின் முடிவாகக் கருதவில்லை; இன்னும் அதிகப் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்பதை நினைவூட்டும் சமூகத்தின் நம்பிக்கையாகவே கருதுகிறேன்.
நடிகர் திரு. கார்த்திக் அவர்களின் உழவன் பவுண்டேஷன், "சிறந்த விவசாயிகள் கூட்டமைப்பு" என்ற விருதை மக்கள் நலச் சந்தைக்கு வழங்கி கௌரவித்தது. விவசாயிகளின் ஒற்றுமைக்கும், உற்பத்தியாளர்களே நேரடியாக விற்பனை செய்யும் புதிய சந்தை அமைப்பிற்கும் கிடைத்த இந்த அங்கீகாரம், எங்கள் முயற்சிக்கு மேலும் ஊக்கமளித்தது.
உலகப் புகழ்பெற்ற திருத்துறைப்பூண்டி தேசிய நெல் திருவிழா – 2026-இல் "சிறந்த மரபுச் சந்தை" என்ற விருது மக்கள் நலச் சந்தைக்கு அறிவிக்கப்பட்டது. இந்த விருது ஒரு சந்தைக்கான பாராட்டு மட்டுமல்ல; இயற்கை வேளாண்மை, பாரம்பரிய உணவு மற்றும் உள்ளூர் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சிக்குக் கிடைத்த அங்கீகாரமாக நான் கருதுகிறேன்.
இந்திய அளவில் சிறந்த பதினைந்து விவசாயிகளைத் தேர்ந்தெடுத்து சோனாலிகா நிறுவனம் 2021-ஆம் ஆண்டு கௌரவித்தபோது, அந்தப் பட்டியலில் இடம் பெற்றது எனக்கு மறக்க முடியாத அனுபவமாகும். அந்த பதினைந்து பேரின் வாழ்க்கைப் பயணத்தை நூலாக வெளியிட்டு மாணவர்களிடம் கொண்டு சென்றது, ஒரு விவசாயியின் வாழ்க்கையும் அடுத்த தலைமுறைக்கு ஒரு பாடமாக அமைய முடியும் என்பதை உணர்த்தியது.
வேலூர் ரோட்டரி சங்கம் வழங்கிய பாராட்டு, சங்கரா தொலைக்காட்சி வழங்கிய "சிறந்த விவசாயி" விருது ஆகியவை சமூக அமைப்புகளின் அன்பையும் நம்பிக்கையையும் வெளிப்படுத்துகின்றன.

இந்து தமிழ் திசை, தினத்தந்தி, தினகரன் உள்ளிட்ட நாளிதழ்களும், சன் தொலைக்காட்சி, புதிய தலைமுறை, மக்கள் தொலைக்காட்சி, சங்கரா, காவேரி, சத்தியா உள்ளிட்ட ஊடகங்களும் அறிவுத்தோட்டத்தின் பணிகளை மக்களிடம் கொண்டு சென்றுள்ளன. இது தனிப்பட்ட புகழுக்காக அல்ல; நல்ல முயற்சிகள் இன்னும் பலரிடம் சென்றடைய வேண்டும் என்பதற்கான வாய்ப்பாக நான் கருதுகிறேன்.
வாழ்க்கையின் இரண்டாம் சுற்று – ஒரு புதிய அர்த்தம்
இன்று நான் திரும்பிப் பார்க்கும்போது, ஓய்வுக்குப் பிறகு எடுத்த அந்த ஒரு முடிவுதான் என் வாழ்க்கையின் மிகச் சிறந்த முடிவு என்று தோன்றுகிறது.
 நகர வாழ்க்கையை விட்டு மண்ணைத் தேர்ந்தெடுத்தேன்.
 விவசாயத்தை ஒரு தொழிலாக மட்டுமல்ல, ஒரு சமூகப் பணியாகக் கருதினேன்.
 அறிவை பகிர்வதை ஒரு கடமையாக ஏற்றுக்கொண்டேன்.
 இயற்கையை நேசிப்பதை வாழ்க்கை முறையாக மாற்றிக்கொண்டேன்.
அதன் விளைவாக அறிவுத்தோட்டம் உருவானது; மக்கள் நலச் சந்தை உருவானது; மண்நல மையம், WAN, STAR போன்ற அமைப்புகள் உருவாயின; ஆயிரக்கணக்கான விவசாயிகள், மாணவர்கள், இளைஞர்கள், குடும்பங்கள் ஆகியோருடன் பயணிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இந்தப் பயணத்தில் நான் கற்றுக் கொண்ட மிகப் பெரிய பாடம் ஒன்று உண்டு.
நாம் பெற்ற அனுபவங்கள், நம்மோடு முடிந்துவிடக் கூடாது; அவை சமூகத்தின் சொத்தாக மாற வேண்டும்.
அதுவே ஓய்வின் உண்மையான பொருள்.
என் பயணத்தில் இணைந்த துணைவியார்
இந்தப் பயணத்தைப் பற்றி எழுதும்போது, என் துணைவியாரின் பங்களிப்பைச் சொல்லாமல் நிறைவு செய்ய முடியாது.
வறண்ட நிலத்தை வாங்கிய நாளிலிருந்து இன்று வரை, அறிவுத்தோட்டத்தின் ஒவ்வொரு வளர்ச்சியிலும் அவர் என்னுடன் இணைந்து பயணித்து வருகிறார். ஒரு குடும்பத்தின் ஒத்துழைப்பு இல்லாமல் எந்த சமூக முயற்சியும் நீண்ட காலம் நிலைத்து நிற்க முடியாது என்பதை என் வாழ்க்கை மீண்டும் மீண்டும் உணர்த்தியுள்ளது.
எனவே, இந்த இரண்டாம் சுற்றின் வெற்றி எனக்கு மட்டும் சொந்தமானதல்ல; எங்கள் குடும்பத்தின் கூட்டு முயற்சிக்குக் கிடைத்த அங்கீகாரமாக நான் கருதுகிறேன்.
நிறைவாக...
ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் இரண்டு சுற்றுகள் இருக்கின்றன.
முதல் சுற்று, தன்னை உருவாக்குவதற்கானது.
இரண்டாம் சுற்று, சமூகத்தை உருவாக்குவதற்கானது.
முதல் சுற்றில் நாம் சம்பாதிப்பது வாழ்வாதாரம்.
இரண்டாம் சுற்றில் நாம் சேர்ப்பது மனிதநேயம்.

முதல் சுற்றில் நாம் உயர்கிறோம்.
இரண்டாம் சுற்றில் பிறரையும் உயர்த்துகிறோம்.
எனது வாழ்க்கையின் இரண்டாம் சுற்று இன்னும் தொடர்கிறது.
மண்ணோடு, மரங்களோடு, விவசாயிகளோடு, மாணவர்களோடு, சமூகத்தோடு இணைந்து பயணிக்கும் இந்தப் பாதை எனக்கு மகிழ்ச்சியையும் மனநிறைவையும் அளிக்கிறது.
"ஓய்வு என்பது ஒரு முடிவல்ல; மனிதன் தனது அனுபவத்தையும் அறிவையும் சமூகத்திற்குத் திருப்பிக் கொடுக்கும் மிகச் சிறந்த பருவம்."

இந்த நம்பிக்கையோடு என் பயணம் தொடர்கிறது.

மக்கள் நலச் சந்தையை தேர்வு செய்தமைக்கு மகிழ்ச்சியும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்
06/07/2026

மக்கள் நலச் சந்தையை தேர்வு செய்தமைக்கு மகிழ்ச்சியும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்

01/07/2026

Address

Vellore
600032

Telephone

9443032436

Website

Alerts

Be the first to know and let us send you an email when ArivuThottam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category